சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சுவாமிக்கு அணிவிப்பது ‘வெட்டிவேர்’ மாலையே. 1960களில் குடிநீரிலும், தலைக்கு எண்ணெய் காய்ச்சவும், விசிறியாகவும், பெரிய வீட்டில் தட்டியாகவும், ஆங்கிலேயர் காலத்தில் ‘பங்கா’வாகவும், பூஜை பொருட்களில் ஒன்றாகவும் பயன் அளிக்கிறது வெட்டிவேர். இன்றோ தரமான, மணமிக்க வெட்டிவேர் கிடைப்பது அரிதாக உள்ளது. கவலை வேண்டாம்... எளி தாக மாடித் தோட்டத்தில் வளர்த்து தரமான வேரை 12-15 மாதங்களில் அறுவடை செய்யலாம் என விளக்குகிறார் தோட்டக்கலை நிபுணர் பா.வின்சென்ட்.
இயற்கை இந்தியாவுக்கு அளித்த பரிசு வெட்டிவேர். உலகமெங்கும் இதனை ‘வெட்டிவேர்’ என்ற தமிழ்ப் பெயரில்தான் அழைக்கிறார் கள்! மண் அரிப்பைத் தடுக்க நம் தென்னிந்திய வெட்டி வேரையே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள் என்பதிலும் நமக்குப் பெரு மையே. இந்தப் புல்லின் மகத்துவம் அறிந்த தாய்லாந்து மன்னர் குடும்பம், இதற்கான சிறப்பு வலைத்தளத்தை www.vetiver.org நடத்த பொருளுதவியும் ஊக்கமும் அளிக்கிறது. 1980களில் இந்தியா வந்த உலக வங்கி விஞ்ஞானிகள் இருவர், கர்நாடக மாநிலம் குண்டுலுபெட் கிராமத்தில் வெட்டிவேரைப் பயன்படுத்தி மண்அரிப்பைத் தடுத்து, நிலத்தடி நீரை உயர்த்தி விவசாயம் செய்வதை ஆவணப்படுத்தி A hedge against soil erosion என்ற நூலை உலகுக்கு அளித்தார்கள். இப்படியாக, கடந்த 30 ஆண்டுகளில் வெட்டிவேரின் சிறப்பு 100க்கும் அதிக நாடுகளில் உணரப்பட்டு, இயற்கைச் சீற்றத்தின் அழிவைக் குறைத்து, சிறு, குறு விவசாயத்தை நன்கு மேம்படுத்தியுள்ளது.
இதே வெட்டிவேர் வளர்ந்த நாடுகளில் சாலை பராமரிப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு, சுரங்கப் பகுதிகளில் மண் அரிப்பை தடுத்தல் போன்ற காரியங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. உதாரணம்... மடகாஸ்கரில் 2000ம் ஆண்டு ஏற்பட்ட புயலில், ஒரு லட்சம் பேர் பயன்படுத்தும் ரயில்பாதை, 280 மண் சரிவுகளால் பாதிக்கப்பட்டது. அப்பாதை வெட்டிவேர் உதவியுடன் சீராக்கப்பட்டு, இன்று தடையின்றி ரயில் ஓட உதவுகிறது. விருது வாங்கித் தந்த வெட்டிவேர்!இந்தோனேஷியாவின் பாலி பகுதி மலைக்கிராம மக்கள் வெளியுலக தொடர்பின்றி, சாலை வசதியின்றி, நோய்களாலும், கல்லாமை யி லும் இருந்த வேளை... கட்டிடப் பொறியாளர் டேவிட் பூத், தன் தொழிலில் சிறந்து இருக்கும்போதே அதனை உதறிவிட்டு சேவை நோக்குடன் 1998ல் பாலிக்கு வந்தார்.
மக்களுடனே தங்கி, வெட்டிவேர் உதவியுடன் சாலை அமைத்து, மண் அரிப்பை தடுத்து, குழந்தைகளுக்கு கல்வி தந்து, இயற்கை விவசாயம் செய்ய வை த்து, மக்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, கிராமம் தன்னிறைவு அடைய உதவினார். இதனால் இங்கிலாந்து அரசு டேவிட்டுக்கு 2005ல் Member of the Most Excellent Order of the British Empire என்ற உயர்ந்த விருது அளித்து கௌரவப்படுத்தியது!
வேரில் வேண்டாமே கைவினை...
இந்தியாவில் வேர்களைக் கொண்டு கைவினைப் பொருட்கள் செய்கிறோம். தாய்லாந்து பாணியோ அதிசயத்தக்கது... ‘வேரில் செய்தால் வெட்டியெடுக்க நேரிடும்... அத னால் மீண்டும் மண் அரிப்பு ஏற்படும்’ என்பதால், அவர்கள் வேரை விட்டு வெட்டிவேர் புல்லைக் கொண்டு அழகிய பொருட்களை உருவாக்குகிறார்கள்.
இதன் சிறப்புகள் ஏராளம்...
இது செலவு குறைந்த நீண்டகால புல் வகையைச் சார்ந்தது. வேர் பிடித்துவிட்டால் வறட்சி, வெள்ளம், நீர் தேங்குதல் ஆகியவற்றை தாங்கி வளரக்கூடியது. எல்லா மண் வகைகளிலும் வளரக்கூடியது. மழை அளவு 200 மி.மீ. முதல் 5,000 மி.மீ. வரை உள்ள இடத்தில் வளர்க்கக்கூடியது. பனிப்படலம் தவிர, 50கு சி வரை உள்ள இடத்தில் கூட நன்கு வளரும் தன்மையுடையது. நன்கு வளர்ந்தால் வேர்கள் 10 அடி வரை வளரும் ஆற்றலுடையது.
கடற்கரைகளைக் காப்பாற்றுங்கள்!
சுனாமிகளும், புயல்களும், நிலநடுக்கங்களும் சமீப 10 ஆண்டு களில் மிக அதிகமாகி வருவது கவலை அளிக்கிறது. இந்த இடர்களும் கூட உலகமயமாகிவிட்டது வேதனையே. குறிப்பாக கடற்கரை ஓரங்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால், பிரேசில் நாட்டில் செய்தது போல வெட்டிவேர் கொண்டு கரைகளை ஸ்திரப் படுத்த வேண்டும். 1,000 மைல்களுக்கு மேல் கடற்கரை கொண்ட தமிழகம் வெட்டி வேரின் சிறப்பை அறிந்து செயல்பட வேண்டும். பல ஆயிரம் ஆண்டு களாக நமது பாரம்பரிய அடையாளமாக வெட்டிவேர் இருந் துள்ளது... நம் முன்னோர் அதை சிறப்பாகவே உபயோகித்து வந்துள்ளனர். இதை மறந்தால், அது வருங்கால சந்ததிக்கு நாம் செய் யும் மிகப்பெரிய துரோகம் என்றாலும் மிகையில்லை.
வெட்டிவேர் 20/20
1. மண் அரிப்பைத் தடுக்கிறது.
2. மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது.
3. நிலத்தடி நீர் உயர உதவுகிறது.
4. மண் வளத்தை பாதுகாக்கிறது.
5. இலை மூட்டாக்கு இட பயன்படுகிறது.
6. கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது.
7. பூச்சி, களை நிர்வாகத்தில் பயன்படுகிறது.
8. காளான் வளர்ப்பில் பயன்படுகிறது.
9. எண்ணெய் எடுக்கப் பயன்படுகிறது.
10. கைவினைப் பொருட்கள் செய்யப் பயன்படுகிறது.
11. உயர் அழுத்தப் பலகை செய்யலாம்.
12. எரிபொருளாகவும் பயன்படுகிறது.
13. கரிமம் நிலைப்படுத்துவதில் பயன்படுகிறது.
14. கழிவுநீரை சுத்திகரிக்கப் பயன்படுகிறது.
15. நிலத்தை அழகுப்படுத்த (Landscape) உதவுகிறது.
16. கூரை வேய உதவுகிறது.
17. சாலை மற்றும் ரயில் பாதை பராமரிப்பில் உதவுகிறது.
18. ஏரி மற்றும் குளக்கரைகளை வலுப்படுத்துகிறது.
19. ஏரி மற்றும் குளங்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
20. பாலைவனங்களில் மேலும் மணல் பரவாமல் தடுக்கிறது.
No comments:
Post a Comment