இம்பூரல் – மருத்துவ பயன்கள்
இம்பூரல் முழுத் தாவரமும் இரத்தப் பெருக்கை கட்டுப்படுத்தும். பித்த நீரைப் பெருக்கும். வயிற்று இரைச்சல், விக்கல் போன்றவற்றை கட்டுப்படுத்தும்.
வெண்மையான, சிறிய மலர்களையும் அகலத்தில் குறுகிய, ஈட்டி வடிவமான இலைகளையும் கொண்ட குறுஞ்செடி. தமிழகமெங்கும் தானே வளர்கிறது. மழைக் காலத்தில் எல்லா இடங்களிலும் தழைத்து வளர்ந்திருக்கும். முழுத் தாவரமும் மருத்துவப் பயன்கொண்டது. இன்புறா, சிறுவேர், சாயவேர் ஆகிய மாற்றுப் பெயர்களும் வழக்கத்தில் உள்ளது.
மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் இரத்த வாந்தி கட்டுபட பசுமையான இம்பூரல்ச் செடியை நன்கு கழுவி கைப்பிடியளவு எடுத்து, நீர் விட்டு விழுதாக அரைத்து 10 கிராம் அளவு 200 மிலி பாலில் கலந்து குடித்து வரவேண்டும். தினமும் இரு வேளைகள் இவ்வாறு செய்ய வேண்டும்.
வாயிலிருந்து இரத்தம் வடிகின்றதா? “இம்பூரலைக் காணாது இரத்தங்கக்கிச் செத்தானே ….” என்ற மருத்துவர் சட்டமுனி குறிப்பிட்டுள்ளார். இம்பூரலின் வேரைக் குடிநீராக்கி குடிக்க, வாயிலிருந்து இரத்தம் வடிதல் நிற்கும். இம்பூரல் மாத்திரைகளும் மருந்து கடைகளில் கிடைக்கின்றன. இவற்றையும் வாங்கி உபயோகிக்கலாம்.
இருமல் கட்டுபட இம்பூரல், வல்லாரை வகைக்கு 40கிராம் நசுக்கி ½ லிட்டல் நீரில் போட்டு 150மிலி ஆகக் காய்ச்சி 2 தேக்கரண்டி வீதம் காலை, மாலை வேளைகளில் குடித்து வரவேண்டும்.
மார்பு எரிச்சல் குணமாக இம்பூரல் இலைச்சாற்றை சம அளவு பாலுடன் கலந்து சிறிதளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வரவேண்டும்.
சளி கட்டுபட வேரை நிழலில் உலர்த்தி, தூள் செய்து. 2 தேக்கரண்டி அளவு தூளைச் சிறிதளவு அரிசி மாவுடன் கலந்து, அடையாகத் தட்டிச் சாப்பிட்டு வர வேண்டும்.
உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல் தீர இம்பூரல் இலைச்சாற்றை எரிச்சல் உள்ள இடங்களில் தடவி வரவேண்டும்.
No comments:
Post a Comment