தத்துவங்கள் என்றால் என்ன?
சிவாகமங்கள் கூற்றுப்படி பரசிவம் ஒன்றே மெய்ப்பொருள். அந்த மெய்ப்பொருளிலிருந்தே எல்லாப் பொருள்களும் தோன்றுகின்றன. செயலற்ற சிவம் சுத்த மாயை அல்லது அருள் சக்தியின் மூலம் தன்னை செயல்படுத்திக் கொள்கிறது. மாயையுடன் கூடிய பிரம்மமாகிய ஈஸ்வரனே அனைத்து பிரபஞ்சத்திற்கும், உயிரினங்களுக்கும் காரணம்.
ஈஸ்வரன் = பிரம்ம (சேதன) + மாயை (அசேதன)
பரமசிவம் என்னும் பர தத்துவம் முப்பத்தாறு தத்துவங்கள் வாயிலாக ஜீவனாக உருவெடுக்கிறது. தத்துவங்கள் பிரபஞ்சத்தை ஆக்கும் மூலப்பொருட்கள் ஆகும். மாயை, பதியால் இயக்கப்படும் போது, இந்த 36 தத்துவங்களும் படிப்படியாகத் தோன்றுகின்றன. இந்த மாயாமலமானது, சுத்தமாயை, அசுத்தமாயை, பிரகிருதி மாயை (சுத்த-அசுத்த மாயை) என்று மூன்றாகப் பிரிந்து, அவை ஒவ்வொன்றிலுமிருந்து, முறையே ஐந்து, ஏழு, இருபத்து நான்கு என, மொத்தம் முப்ப்பத்தாறு தத்துவங்கள் தோன்றுகின்றன.
சுத்தமாயையிலிருந்து தோன்றும் ஐந்து தத்துவங்கள் "சிவதத்துவம்". அவை மூலப் பொருளின் உள்ளியல்பை உரைக்கின்றன. சுத்த மாயை ஆணவ மலத்தோடு கலவாதது.அசுத்தமாயை-(மகாமாயை) சுத்த மாயையினுள் அடங்கி நிற்பது. ஆணவ மலத்தோடு கலந்தது. இதிலிருந்து தோன்றும் ஏழு "வித்தியா தத்துவம்". அவை : காலம்
நியதி
கலை
வித்தை
இராகம்
மாயம்
எனும் கஞ்சுகங்கள் (ஆடைகள்) ஆறுடன், ஆன்மா (புருடன்) ஒன்றும் சேர்ந்து, வித்தியா தத்துவங்கள் ஏழு ஆகின்றன. அசுத்த மாயை தத்துவங்கள் செயலற்றுறங்கும் பிரபஞ்சத்திலும் அதில் வாழும் மற்ற உயிரினங்கள் உள்ளும் ஆத்மா எவ்வாறு செயற்பாட்டுக்கான கருவிகளாக பொருந்தி இருக்கிறது என்று விளக்குகின்றன. இந்த வித்தியா தத்துவங்கள் தொழிற்படுவதற்கு, சிவ தத்துவங்கள் அவசியமாகும். காலம், நியதி, கலை எனும் மூன்றும் விந்தினாலும், வித்தை, சுத்த வித்தையாலும், இராகம் ஈசுரனாலும், மாயம் நாதத்தினாலும், புருடன் சதாசிவத்தினாலும் இவ்வாறு இயக்கப்படுகின்றன.பிரகிருதி மாயை (சுத்த-அசுத்த மாயை). அசுத்த மாயையிலிருந்து பிரகிருதி மாயை தோன்றுகிறது. பிரகிருதி தன்னை அசுத்த மாயை மூலம் ஊக்குவித்துக் கொண்டு "ஆன்ம தத்துவம்" ஆகிய இருபத்து நான்கு தத்துவங்களாகிய பிரபஞ்சத்தின் எல்லா அம்சங்களுக்கும் காரணமாகிறது. இருபத்து நான்கு ஆன்ம தத்துவங்களுமே, உலகத்தினதும் உயிர்களினதும் அடிப்படை ஆகும். சிவதத்துவத்தால், வித்தியா தத்துவம் தூண்டப்பட்டு, ஆன்மா இயங்குவதற்கான கருவிகள் வழங்கப்பட்டால் மட்டும் போதாது. அவ்வாறு இயக்கப்படுவற்கான பௌதிக உடலையும் அதுசார்ந்த பொறிகளும் ஆன்மாக்கு அவசியமாகின்றன. பஞ்சபூதங்களும், ஐம்பொறிகளும் இன்னும் ஒன்பது கருவிகளும், வெவ்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஆன்ம தத்துவத்தில் அடக்கப்பட்டிருக்கின்றன.
சிவ தத்துவம் ஐந்து — நாதம், விந்து, சாதாக்கியம், ஈஸ்வரம், சுத்தவித்யை.
நாதம் — முதலில் இறைவன் சுத்த மாயையில் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் இது விரிவடையத் தக்கது எனப் பொதுவாக நோக்குவான். அவ்வாறு அவன் நோக்கிய அளவில் சுத்த மாயையின் ஒரு பகுதி காரியப்படுவதற்கு ஏற்ற பக்குவத்தைப் பெறும். பக்குவப்பட்ட அப்பகுதி சிவதத்துவம் என்றும் நாதம் என்றும் சொல்லப்பெறும். இது சுத்த மாயையின் முதல் விருத்தி. இறைவனது ஞானசத்தி மட்டும் செயற்படும் நிலை இது. தூய அறிவாலான பரம்பொருளின் முழுமையான நனவிலி நிலை(unconscious mind). இதுவே பரசிவ வடிவம் ஆகும்.விந்து - சக்தி. இறைவன் பின்னர் முதல் விருத்தியாகிய சிவ தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது கிரியா சத்தியால் இது விரிவடைக எனப் பொதுவாகக் கருதுவான். அவ்வாறு அவன் கருதிய அளவில் அப்பகுதி இரண்டாக விருத்திப்பட்டு சத்தி என்றும், விந்து என்றும் பெயர் பெறும். இறைவனது கிரியா சத்தி மட்டும் செயற்படும் நிலை இது. அந்த இயக்கத்தாலேயே, சிவத்துடன் இணைந்து ஏனைய தத்துவங்களை உருவாக்க ஆரம்பிக்கும் இறைவனின் திருவருட்சக்தியின் நிலை ஆகும்.சாதாக்கியம் - சதாசிவன். இறைவன் பின்னர் இரண்டாம் விரிவாகிய சத்தி தத்துவத்தின் ஒரு பகுதியைத் தனது ஞான சத்தியால் 'இது இவ்வாறு விரிவடையத்தக்கது' என்று நோக்கியும், கிரியா சத்தியால் 'இது இவ்வாறு விரிவடைக' என்று கருதியும் நிற்பான். இந்நிலையில் அப்பகுதி மூன்றாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சதாசிவம் அல்லது சாதாக்கியம் எனப் பெயர் பெறும். இறைவனது ஞான சத்தியும், கிரியா சத்தியும் சமமாகச் செயற்படும் நிலை இது. ஏனைய தத்துவங்களின் தோற்றம் தூண்டப்படும்.ஈசுரம் - ஞான சத்தியையும் கிரியா சத்தியையும் சமமாகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் மூன்றாம் விருத்தியாகிய சதாசிவ தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குக் கிரியா சத்தியை மிகச் செலுத்தி இஃது இவ்வாறு ஆகுக எனக் கருதுவான் அப்பொழுது அம்மூன்றாம் விருத்தி நான்காம் விருத்தியாக வளர்ச்சி அடைந்து ஈசுரம் எனப் பெயர் பெறும். கிரியா சத்தி மிகுந்தும் ஞான சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது.செயலற்ற நிலையில் இருக்கும் ஆன்மாக்களை மறைத்தலுக்குள்ளாக்கும் செயல்பாடு ஆரம்பமாக, அதனூடே மறைவாக இறையறிவும் இயங்கிக் கொண்டிருக்கும்.சுத்த வித்தை. ஞான சத்தி மிகுந்தும் கிரியா சத்தி குறைந்தும் செயற்படும் நிலை இது. கிரியா சத்தியை மிகச் செலுத்தி நின்ற இறைவன் பின்னர் நான்காம் விருத்தியாகிய ஈசுர தத்துவத்தின் ஒரு பகுதியைச் செயற்படுத்தற்குத் தனது ஞான சத்தியை மிகச் செலுத்தி நிற்பான். அப்பொழுது அப்பகுதி ஐந்தாம் விருத்தியாக வளர்ச்சியடைந்து சுத்த வித்தை எனப் பெயர் பெறும். படைத்தல், காத்தல், அழித்தல் எனும் முத்தொழிலுக்கு அடிப்படையான இறைதத்துவம் இதன்போது, முழுமை்யாகச் செயற்பட, செயல் (கிரியாசக்தி) பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும்.பிரகிருதியிலிருந்து முதலில் அந்தக்கரணங்களும் பின்னர் ஞானேந்திரியங்களும் கன்மேந்திரியங்களும், அவற்றின் பின்னர் தன்மாத்திரைகளும், அவற்றிலிருந்து ஐம்பூதங்களும் தோன்றும். பூதங்களின் பரிணாமமே இவ்வுலகம்.
⟶ மனம் (எண்ணங்களின் தொகுப்பு)
⟶ புத்தி (தர்க்க ரீதியாக ஆராய்ந்து முடிவு செய்யும் எண்ணங்கள்)
அந்தகரணம் ↣
⟶ அகங்காரம் (அநாத்மாவை நான் என என்னும் எண்ணம்)
⟶ சித்தம் (அனுபவங்களின் பதிவு)
⟶ ஸ்ரோத்திரம் → காது (கேட்கும் சக்தி)
⟶ துவக் → தோல் (ஸ்பரிசம்)
ஞானேந்திரியங்கள் ⟶ சக்ஷுஸ் → கண் (பார்வை)
⟶ ஜிஹ்வை → நாக்கு (சுவை)
⟶ கிராணம் → மூக்கு (நுகரும் சக்தி)
⟶ வசனம் → வாக்கு (பேசும் சக்தி)
⟶ கமனம் → பாதம் (நடத்தல்)
கர்மேந்திரியங்கள் ⟶ பாணி → கைகள் (காரியம்)
⟶ பாயு → எருவாய் (மல விசர்ஜனம்)
⟶ உபஸ்த்தம் → கருவாய் (ஆனந்தித்தல்)
மனித உடல் மாபூதங்கள் ஐந்தினால் ஆனது. அவை: நிலம், காற்று, நீர், தீ, ஆகாயம்.
தன்மாத்திரைகள் ஐந்து: சுவை, ஒளி, ஊறு (தொடுகை), ஓசை, நாற்றம் (மணம்).
கன்மேந்திரியம் ஐந்து: பற்றுதல் (பாணி), பதித்தல் (பாதம்), படைத்தல் (உபஸ்த்தம்), பலுக்கல் (வாக்கு), கழித்தல் (பாயு).கன்மம் என்றால் செயல். மனித உடல் செய்யும் ஐந்து செயல்களையும் கன்மேந்திரியமாக வகைப்படுத்தப்படுகின்றன. பற்றும் செயலைக் கையும், (கால்) பதித்தலை பாதங்களும், ஆக்கத்திறனுடன் படைத்தலை மூளையும், பலுக்கும் (பேசும்) செயலை நாக்கும், கழிக்கும் தொழிலை கழித்தல் அங்கங்களும் செய்கின்றன. இவை ஐந்தும் ஆன்மா, உடலில் இயங்க அவசியமாகும். ஞானேந்திரியம் ஐந்து: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளும் ஞானேந்திரியம் ஆகும். இவ்வைந்தும் ஒன்றோடொன்று இணைந்து செயல்புரிவதாலேயே, உயிர்கள் அறிவைப் பகுத்தறிந்து மெல்ல மெல்ல மேனிலையை அடைகின்றன.
அந்தக்கரணங்கள் நான்கு: மனம், புத்தி, அகங்காரம், சித்தம், எனும் நான்கும். சித்தத்தைப் "பிரகிருதி" என்றும் அழைப்பதுண்டு. எனவே தான், சித்தத்தை முதலாகக் கொண்ட இந்த இருபத்து ஆன்ம தத்துவங்களும் "பிரகிருதி மாயா தத்துவங்கள்" எனப்படுகின்றன. இப்பிரகிருதியுடன் புருடனான ஆன்மா (வித்தியா தத்துவங்களுள் ஒன்று) இணையும் போதே, ஏனைய தத்துவங்களுடன் இணைந்து, இப்பௌதிக உலகில் செயலாற்ற ஆரம்பிக்கின்றது என்பது சைவ சித்தாந்தம்
No comments:
Post a Comment