சிவனுக்கும் பார்வதிக்கும் இடையே நடந்த உரையாடல்:-
பார்வதி: நாதா! அடிக்கடி என்னை கயிலாயத்தில் விட்டுவிட்டுப் போய்விடுகிறீர்கள். சுடுகாட்டுக்குச் சென்று சாம்பலைப் பூசியும் ஆனந்தமாக இருக்கிறீர்கள். எனக்குப் பிரிவு துயர் தாங்கவில்லை. என் மனதை சாந்தப்படுத்த எனக்கும் தியானம், சமாதி நிலை முதலியவற்றை கற்றுத் தரக்கூடாதா?
சிவன்: அன்பே! ஆருயிரே! நீ இல்லாமல் இவ்வுலகம் இயங்கமுடியாதே. சக்தி இல்லையேல் சிவன் இல்லை. வா, உனக்குக் கற்றுத் தருகிறேன். இதோ இப்படி பத்மாசனத்தில் அமர். கண்களை மூடு. தியானத்தைத் துவங்கு. மனதை உள்முகமாகத் திருப்பு.
என்ன தெரிகிறது?
பார்வதி: உங்கள் உருவம்தான் தெரிகிறது.
சிவன்: அதையும் தாண்டிச் செல். இப்போது என்ன தெரிகிறது?
பார்: மிகப் பெரிய ஜோதி (ஒளி) தெரிகிறது.
சிவன்: நல்லது.இன்னும் மேலே செல். என்ன காண்கிறாய்?
பார்: ஓம்கார நாதம் என் காதில் ஒலிக்கிறது.
சிவன்: அந்த நாதத்தையும் தாண்டிச் செல்வாயாக! இப்போது என்ன அனுபவம் ஏற்படுகிறது?
பார்: ! ! ! ! !
சிவனுடைய கடைசி கேள்விகு பார்வதி பதிலே சொல்லவில்லை. அவள் பிரம்மத்தில் (கடவுளிடம்) ஐக்கியமாகிவிட்டாள். அங்கே கேட்பவரும் இல்லை, கேள்வியும் இல்லை. காண்பவருமில்லை, காணப்படும் பொருளுமில்லை.எல்லாம் பிரம்மாண்டசக்தியில், மூலமுதற் பொருளில் கரைந்து விட்டது. மாறுதலற்ற, உருவமற்ற ஒரே பொருள்தான் அங்கே உண்டு.
திடீரென பார்வதியின் சன்னமான, ஆனந்தமயமான குரல் ஒலித்தது.
அஹம் பிரம்மாஸ்மி
நானே பிரம்மம் (இறைவன்)!
இதையே அருணகிரிநாதர் சும்ம இருப்பதே சுகமென்பார். சும்மா இரு! சொல் அற! என்பார்.
இது வட கேரள காஞ்சன்காடு ஆனந்தாஸ்ரமத்தின் சுவாமி ராமதாஸ் சொன்ன கதை! மொழிபெயர்ப்பு: லண்டன் சுவாமிநாதன். இது தொடர்பாக நான் முன்னர் எழுதிய நான்கு கதைகளை இதுவரை படித்திராவிடில் தொடருங்கள்………….
கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!!
சம்ஸ்கிருத, தமிழ் மொழி உப்பு பொம்மை கதைகள்
எழுதியவர்: லண்டன் சுவாமிநாதன்
கட்டுரை எண்:947 , தேதி ஏப்ரல் 1, 2014.
கல்லூரியில் ‘கெமிஸ்ட்ரீ’ படிக்கும் மாணவர்களுக்கு இரசாயன (வேதியியல்) பரிசோதனைக் கூடத்தில் உப்பு பரிசோதனைகள் நிறைய வரும். இந்தப் பரிசோதனை களைத் துவக்கிவத்தவர்கள் உபநிஷத ரிஷிகள். பெரிய கருத்துக்களை சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லித் தருவது போல உபநிஷதங்கள் கற்பிக்கின்றன. ஒரு மாணவனை ஒரு கைப்பிடி உப்பைக் கொண்டுவரச் சொன்னார் ஒரு ரிஷி. அவனையே விட்டு ஒரு கோப்பை நீரில் போடச் சொன்னார். அது கரைந்த பின்னர் உப்பு எங்கே போனது என்று கேள்வி கேட்டு, உப்பு நீரை சுவைக்கச் சொல்லி இன்னும் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு பிரம்மம் பற்றிப் பாடம் நடத்துகிறார். பிற்காலத்தில் எல்லோரும் இந்த உவமைகளைப் பயன்படுத்தத் துவங்கினர்.
இதே கருத்தைச் சொல்லும் ஒரு சித்தர் பாடல்:
நாழி உப்பும் நாழி அப்பும்/ என்ற பாடலை “சிவவாக்கியருடன் 60 வினாடி பேட்டி” என்ற தலைப்பில் ஏற்கனவே கொடுத்துள்ளேன்:
நாழி அப்பும் நாழி உப்பும் நாழியான வாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்த இடம்
ஏறில் ஆறு ஈசனும் இயங்கு சக்ரதரனையும்
வேறு கூறு பேசுவோர் வீழ்வர் வீண் நரகிலே.
அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயிலே மண்ணு என்னும் கிராமியப் பழமொழியை விளக்க உப்பு- நீர் உவமையைப் பயன்படுத்துகிறார் சிவவாக்கியர் என்னும் சித்தர். உப்பு – எல்லோருக்கும் தெரிந்த சொல். அப்பு என்றால் தண்ணீர் என்று பொருள்.
கடவுளைப் பார்த்த எவரும் அவரை வருணிக்க முடியாது. அவ்வளவு மகிமை நிறைந்தவர். வருணனைகளுக்கு அப்பாற்பட்டவர். கண்டவர் விண்டிலர்.
யாராவது ஒருவன் கடவுளின் ரூப லாவண்யங்களை வருணித்து கடவுள் இப்படித்தான் இருப்பான் என்று சொன்னால் அவன் கடவுளைப் பார்த்ததே இல்லை என்று பொருள். அதவது விண்டவர் கண்டிலர். இதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர் சில கதைகளைச் சொல்கிறார். அதே விஷயங்களை சித்தர்களும் தமிழ் அடியார்களும் சொல்லுகின்றனர். சங்கத் தமிழ் இலக்கியத்திலும் இந்த உவமை இருக்கிறது!!
ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமிலார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேனம் கொட்டாமோ—என்று மாணிக்கவாசகர் பாடினார்.
நான்கு சுவையான கதைகள்
ராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன கதைகள் மிகவும் பிரபலமானவை; எல்லோரும் கேட்டிருப்பார்கள் ஆகவே சுருக்கமாகப் பார்த்துவிட்டுத் தமிழ் அடியார்களின் பாடல்களைக் காண்போம்.
கதை 1:–
ஒரு உப்பு பொம்மை கடலின் ஆழத்தைக் காண வேண்டும் என்று ஆசைப்பட்டது. அது மட்டும் அல்ல. அதை எல்லோருக்கும் சொல்லவேண்டும் என்றும் திட்டம் தீட்டியது. உடனே கடல் நீரில் குதித்தது. அதற்கு மிகவும் சந்தோஷம். வாழ்நாள் முழுதும் எதை எண்ணியதோ அது நடந்துவிட்டது! ஆனால் சில அடி ஆழம் போவதற்குள் உப்பு எல்லாம் கரைந்து கடலுடன் ஐக்கியமாகிவிட்டது. அதே போலத்தான் பிரம்மன் பற்றிய அறிவும். கடவுளுக்கு நெருக்கமானவர்கள் சமாதியில் செல்லும் போது பிரம்மம் பற்றி ஞானம் வருகிறது. அதில் மூழ்கியவர்கள் வெளியே வருவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.
கதை 2:
புதிதாக கல்யாணம் ஆன ஒரு பையன் மாமனார் வீட்டுக்கு நண்பர்களுடன் போனான். ஹாலில் (கூடத்தில்) உட்கார்ந்தான். அவனுடைய மனைவியின் தோழிகள் புது மாப்பிள்ளையைப் பார்க்கக் கூடிவிட்டனர். கட்டுக்கடங்காத ஆர்வம்! எல்லோரும் ஜன்னல் வழியாகப் பார்த்து, ஒவ்வொரு பையனையாக காட்டி ‘இவன்தான் உன் புருஷனா?’ என்று கேட்கின்றனர். ஒவ்வொரு பையனைக் காட்டி தோழிகள் கேள்வி கேட்கும் போதெல்லாம், புன்னகை செய்தவாறே ‘அவன் இல்லை’, ‘அவன் இல்லை’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். அவளுடைய உண்மையான கணவனைக் காட்டி இவன் தானா உன் புருஷன்? என்ற போது அவள் முகம் மலர்ந்தது. ஆனால் ‘இல்லை’ என்ற பதிலோ ‘ஆமாம்’ என்ற பதிலோ வரவேயில்லை. தோழிகளுக்குப் புரிந்துவிட்டது. பிரம்மமனைக் கண்டவர் நிலையும் இதே. அவர்கள் பேரானந்தத்தில் மூழ்கி மவுனம் ஆகிவிடுவர்.
கதை 3:-
ஒரு மனிதனுக்கு இரண்டு பையன்கள் இருந்தனர். இரண்டு மகன்களையும் குருகுலத்தில் சேர்த்தார். பல ஆண்டுகளுக்குப் பின்னர் இருவரும் வீடு திரும்பினர். மூத்தவனைப் பார்த்து பிரம்மத்தின் இயல்புகள் என்ன? என்று கேள்வி கேட்டார். உடனே அவன் பல செய்யுள்களை ஒப்புவித்து, தனது மேதா விலாசத்தைக் காட்டினான். நீ பிரம்மத்தை அறியவே இல்லை என்று தந்தை சொல்லிவிட்டார். இரண்டாவது மகனை அதே கேள்வி கேட்டார். அவன் கீழ் நோக்கிய பார்வையுடன் மவுன நிலைக்குப் போய்விட்டான். தந்தைக்குப் புரிந்துவிட்டது; அவனுக்கு பிரம்ம ஞானம் எற்பட்டு விட்டது என்று.
கதை 4:
நான்கு நண்பர்கள் ஒரு பெரிய சுவரால் சூழப்பட்ட ஒரு உயரமான கட்டிடத்தைப் பார்த்தனர். உள்ளே என்ன இருக்கிறது என்பதை அறிய நால்வருக்கும் ஒரே ஆசை. முதல் ஆள் உயர ஏறிப் போய் எட்டிப் பார்த்தான். ஆ! ஆ! ஆ! என்று குரல் மட்டுமே வந்தது. உள்ளே குதித்து விட்டான். இரண்டாவது, மூன்றாவது, நாலாவது ஆள் ஒவ்வொருவனாகப் போனார்கள். அவர்களுக்கும் இதே கதிதான். பிரம்மத்தை அறிந்தவர்கள் வெளியே வரவும் மாட்டார்கள், பிரம்மத்தினது குண இயல்புகளை வருணிக்கவும் மாட்டார்கள். வருணிக்கவும் முடியாது. ஆனந்தக் கடலில் நீந்தத் துவங்கிவிடுவார்கள்.
-சுபம்-
No comments:
Post a Comment